நினைவு சின்னமாகிறதா ராமர் பாலம்: மத்திய அரசு பரிசீலனை
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மத்திய கலாச்சார அமைச்சகத்தில் நடைபெற்று வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று(ஜன:20) தெரிவித்தது. இதனையடுத்து, அமைச்சகத்திடம் மனு தாக்கல் செய்ய சுப்ரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இது குறித்து பிப்ரவரி முதல் வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கடந்த வாரம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யும் பாஜக தலைவருமான சுப்ரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார். சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்திற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவில்(2007) முதன்முதலில் இதைக் கோரினார்.
வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்
ராமர் மற்றும் அவரது இராணுவம் சீதையை மீட்க சென்ற புராண பாலமான ராமர் சேது இருந்ததற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று கடந்த மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. மத்திய அரசின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று சுவாமியின் மனுவை விசாரித்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுப்ரமணியன் சுவாமி விரும்பினால், கலாச்சார அமைச்சகத்திற்கு மனு அளிக்கலாம் என்றார். அதனபின், இந்த மனுவை தள்ளுபடி செய்த அமர்வு, அமைச்சகத்தின் முடிவில் சுவாமிக்கு திருப்தி இல்லையென்றால், அவர் உச்ச நீதிமன்றத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்று கூறியது.