சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது
சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இந்த திட்டத்தைத் தொடர மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஜன:12) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் முன் மொழிந்தார். அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு ஆதரவாக பேசியுள்ளனர். பாஜக, "ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறி இருக்கிறது. அதிமுக, "இப்போது உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறி இருக்கிறது. இந்த திட்டத்தால் ராமர் பாலம் பாதிக்கப்படும் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. அதனால், இது ஒரு சர்ச்சைக்குரிய திட்டமாக கருதப்படுகிறது.
திட்டத்தை முன்மொழிந்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
"அரசியல் காரணங்களால் சேது சமுத்திரத் திட்டத்தை பாஜக எதிர்க்கிறது. இந்த திட்டத்திற்கு ஆதரவாக இருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வழக்கு தொடர்ந்தார்." என்று தமிழக முதல்வர் கூறி இருக்கிறார். " சேது சமுத்திரம் திட்டமானது பாக் ஜலசந்தியை மன்னார் வளைகுடாவுடன் இணைக்கும் கடல் வழி பாதையாகும். சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயரும். இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயண நேரத்தை குறைக்கும் மற்றும் மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். எனவே, சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் ஆரமிப்பிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்" என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.