
யூடியூப் வீடியோக்கள் பார்த்து வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள் கைது
செய்தி முன்னோட்டம்
யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த பிளஸ் 1 மாணவர்கள், அதை காரில் வீசி சோதித்தும் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பீதியை கிளப்பியுள்ளது.
புதுச்சேரி காந்தி நகர் பகுதியில் ஞாயிற்றுகிழமை(ஜன:8) இரவு 10.30 மணி அளவில் திடீரென்று வெடி சத்தம் கேட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் வாகனம் ஒன்றும் சேதமடைந்து இருந்தது. அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தை ஆராய்ந்து விட்டு, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
வெடித்தது ஒரு நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்று வெடிகுண்டு நிபுணர்கள் சந்தேகத்தினர்.
குற்றவாளிகளை கண்டறிய அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆராயப்பட்டது.
இதன் அடிப்படையில், வெடிகுண்டை வீசி எரிந்தது 6 சிறுவர்கள் என்று கண்டறியப்பட்டது.
பாண்டிச்சேரி
விளையாட்டால் வந்த வினை
விசாரணையில் இந்த சிறுவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
வெடிகுண்டு வீசிய 4 சிறுவர்களை கைது செய்த போலீஸார், இன்னும் இருவரைத் தேடி வருகின்றனர்.
இவர்கள் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் மிஞ்சியதால் அதை என்ன செய்யலாம் என்று யூடியூப்பில் பார்த்துள்ளனர். அதில், சிறிய வெடிகுண்டை எப்படி செய்யலாம் என்ற வீடியோ இருந்திருக்கிறது.
அதை பார்த்த சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக அதை செய்து சோதித்து பார்த்திருக்கின்றனர்.
இதற்காக கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் தற்போது சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு சிறுவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.