மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது அமலாக்க இயக்குநரகம்
சம்மனைத் தவிர்த்ததற்காக அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த இரண்டு புகார்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று அவருக்கு அமலாக்க இயக்குநரகம் மீண்டும் ஒரு புதிய சம்மனை அனுப்பியுள்ளது. தற்போது அனுப்பியுள்ள சம்மனில், டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் மார்ச் 21 ஆம் தேதி ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்க இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
8 சம்மன்களை புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்
இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையில், அவர் 5 சம்மன்களை புறக்கணித்ததை அடுத்து, அமலாக்க இயக்குநரகம் டெல்லி நீதிமன்றத்தில் அவர் மீது புகார் அளித்தது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே அவருக்கு அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. அதன் பிறகும், அவர் ஆஜராகவில்லை என்றதும், அமலாக்க இயக்குநரகம் டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் புகார் அளித்தது. அந்த இரண்டு புகார்களையும் நேற்று விசாரித்த டெல்லி நீதிமன்றம், இந்த பிரச்சனையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது