இன்று முதல் ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு
தமிழ்நாடு முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலம், ஆவின் தனது 225 வகை பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, ஆவின் நெய் அரை லிட்டருக்கு ரூ.50 மற்றும் 1 லிட்டருக்கு ரூ.70 என விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 15.,மில்லி பாக்கெட் நெய் ரூ.14ல் இருந்து தற்போது ரூ.15க்கு விற்பனையாகவுள்ளது. தொடர்ந்து, 100.,மில்லி பாக்கெட் நெய் ரூ.70ல் இருந்து ரூ.80ஆகவும், 500.,மில்லி ரூ.315ல் இருந்து ரூ.365ஆகவும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630ல் இருந்து ரூ.700ஆக உயர்த்தி விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த விலை உயர்வு இன்று(செப்.,14) முதல் அமலுக்கு வந்துள்ளது.
பண்டிகளையொட்டி சிறப்பு பலகாரங்கள் தயாரிக்க திட்டம்
இதனைத்தொடர்ந்து ஆவின் நிறுவனம் தயாரிக்கும் வெண்ணெய் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாம். அரை கிலோ வெண்ணெய்க்கு ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.260க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்ணெய் தற்போது ரூ.275க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதனிடையே, ஆவின் நிறுவனம் பால் சம்மந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்தாண்டு வரவிருக்கும் ஆயுதப்பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளையொட்டி சிறப்பு காரவகை மற்றும் இனிப்புவகை பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை தங்கள் அலுவலக ஊழியர்களுக்கு பண்டிகைகளையொட்டி இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களை வழங்க மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களை அணுகி வருகிறார்கள் என்றும் ஆவின் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.