சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி
சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவானது நேற்று(ஆகஸ்ட்.,6) அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நடந்தது. இந்த விழாவில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிய திரெளபதி முர்மு நிகழ்ச்சியில் பேசுகையில், "கலாச்சாரம், நாகரீகம் உள்ளிட்டவைகளின் தொட்டிலாக தமிழகம் உள்ளது.திருக்குறளில் பொதிக்கப்பட்ட மகத்தான கருத்துக்கள் பல நூற்றாண்டு காலமாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த விழாவில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் உள்ள கல்லூரிகளில் கிட்டத்தட்ட 1.85லட்சம் பேர் படிக்கிறாரக்ள். அதில் 50% மாணவிகள் என்னும் பட்சத்தில் தங்கப்பதக்கம் பெற்ற 105 பேரில் 70%மாணவிகள்" என்றும் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் உரையாற்றினர்
மேலும் அவர், "1857ல் துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் 165 ஆண்டுப்பயணத்தில் பல அறிஞர்கள், தலைவர்கள், தொலைநோக்குப்பார்வையாளர்கள் உள்ளிட்டோரை உருவாக்கிய இது தற்போது கற்றலின் புகலிடமாக திகழ்கிறது"என்றும் குறிப்பிட்டுப்பேசினார். இதனிடையே, இந்த பல்கலைக்கழகம் சர்வதேச ஒத்துழைப்பினை ஊக்குவித்தல், அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், துறையிடையேயான ஆய்வுகள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இவரையடுத்து பேசிய முதல்வர், தலைசிறந்த பெண்ஆளுமைகளை வழங்கிய பல்கலைக்கழகம் என்னும் பெருமையினை பெற்றுள்ளது என்றும், பேரறிஞர்.,அண்ணா இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார் என்றும், தானும் இந்த பல்கலைக்கழகத்தினை சார்ந்தவன் தான் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர்,"பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய கடுமையாக உழைக்கவேண்டும். அப்பொழுதுத்தான், உங்களுடன் இணைந்து உங்கள் குடும்பம், மாநிலம், நாடு என அனைத்தும் உயரும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.