முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
செய்தி முன்னோட்டம்
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் நாளை(ஆகஸ்ட்.,5)வருகைத்தருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி அவர் நாளை மாலை 3.30மணிக்கு தமிழகம் வந்தடைவார் என்றும் கூறப்படுகிறது.
நாளை காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் திரௌபதி முர்மு தனிவிமானம் மூலம் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு வருகிறார்.
அதன்பின்னர் அவர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மசினகுடியில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து காரில் பயணம் மேற்கொள்ளும் திரவுபதி முர்மு முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு செல்கிறார்.
அங்கு வசிக்கும் பழங்குடியின-ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களை சந்தித்து பேசும் இவர், அத்துடன் அங்குள்ள யானைகளையும் பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
தமிழகம்
900க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முதுமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு
இதனை தொடர்ந்து, சமீபத்தில் எடுக்கப்பட்டு ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படத்தில் இடம்பிடித்த பாகன் தம்பதியான பொம்மன்-பெள்ளி உள்ளிட்டோரை சந்திக்கும் ஜனாதிபதி அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வருகையினையொட்டி மசினகுடி ஹெலிபேட், வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட இடங்களில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நாளை வரை சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்க கூடாது என்று காவல்துறை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி வருகை காரணமாக கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முதுமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.