கவர்னர் குறித்து ஸ்டாலின் எழுதிய புகார் கடிதம் - உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய ஜனாதிபதி
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றுகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையில் இருந்த சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தது, முதல்வர் பேசிக்கொண்டிருக்கையில் அவையிலிருந்து வெளியேறிய சம்பவம் போன்றவை அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் தமிழகஅரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. செந்தில்பாலாஜி விவகாரத்தில் இம்மோதல் உச்சத்தினைத்தொட்டது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடந்த 9ம் தேதி 19பக்க புகார் கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பிவைத்தார். அதில், தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு ஏற்றவகையில் ஆளுநர் பணியாற்ற அறிவுறுத்தும்படியும், மரபுகளை மீறாமல் தமிழக மக்களுக்காக பணியாற்ற அறிவுறுத்துங்கள் என்றும் கூறியிருந்தார்.
அரசியல்வாதியாக செயல்படும் ஒருவர் ஆளுநர் பதவியில் இருப்பது பொருத்தமற்றது - மு.க.ஸ்டாலின்
மேலும், "தமிழக அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டு போடும் விதமாக நடந்துக்கொள்ளும் தமிழக ஆளுநர், அப்பதவியில் இருந்து நீக்க தகுதியானவர்" என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து,"அரசியல்வாதியாக செயல்படும் ஒருவர், ஆளுநர் பதவியில் இருப்பது பொருத்தமற்றது. ஊழல் செய்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரிய கோப்புக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அவர் அப்பதவியில் நீடிப்பது குறித்த முடிவினை ஜனாதிபதியிடமே விட்டுவிடுகிறேன்" என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தினை முழுமையாக படித்த ஜனாதிபதி முர்மு, அதனை தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த கடிதம் மீதான நடவடிக்கையினை உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.