தேமுதிக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 11ம் தேதி வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பிய சில மணிநேரத்திலேயே அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று(டிச.,14) நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி திருவேற்காட்டில் தனியார் மண்டபத்தில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் விஜயகாந்த் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் மகிழ்ச்சியில் 'கேப்டன் வாழ்க' என்று கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து இக்கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது, பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது தான்.
மக்களவை தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் விஜயகாந்திற்கே உள்ளது
அதற்கான தீர்மானம் வாசிக்கப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் உடனே விஜயகாந்த் கால்களில் விழுந்து வணங்கினார். மேலும், வரவிருக்கும் மக்களவை தேர்தல் கூட்டணி உள்ளிட்ட இதர முக்கிய விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் விஜயகாந்திற்கு தான் உள்ளது என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தேமுதிக கட்சி தொண்டர்கள் கட்சி பணிகளில் ஒற்றுமையாக இணைந்து முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், 'கேப்டன் நமக்கு கொடுத்த பணியினை திறம்பட செயல்படுத்த நான் உறுதுணையாக இருப்பேன்' என்றும், 'இந்த கட்சி தொடங்கப்பட்டதன் லட்சியத்தை அடைய விடாமல் உழைப்போம்' என்றும் பேசியுள்ளார்.