Page Loader
சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட்
1964ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த சூட், டெல்லி ஐஐடியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட்

எழுதியவர் Sindhuja SM
May 15, 2023
11:05 am

செய்தி முன்னோட்டம்

1986ஆம் ஆண்டின் கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூத், மத்திய புலனாய்வுத் துறையின்(சிபிஐ) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கர்நாடகாவில் காவல்துறை தலைமை இயக்குநராக(டிஜிபி) பணியாற்றி வரும் சூட், சிபிஐ இயக்குனராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பணியாற்ற உள்ளார். தற்போதைய சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரவீன் சூட் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவால் சிபிஐ தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும், பொதுவாக, சிபிஐ இயக்குனரின் நிலையான பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. ஆனால், ஐந்து ஆண்டுகள் வரை அது நீட்டிக்கப்படலாம்.

details

பிரவீன் சூட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

1964ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த சூட், டெல்லி ஐஐடியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் பப்ளிக் பாலிசி மற்றும் மேனேஜ்மென்ட் பயின்ற அவர், 1986 இல் இந்தியக் காவல் சேவையில்(IPS) சேர்ந்தார். அதன் பிறகு, 1989இல் மைசூரில் உதவிக் காவல் கண்காணிப்பாளராக அவர் பணியாற்றினார். பெங்களூருவில் துணை போலீஸ் கமிஷனராக(டிசிபி) அவருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு முன்பு, பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் காவல் கண்காணிப்பாளராக அவர் பணியாற்றினார். 2004-2007க்கு இடையில் மைசூர் நகர போலீஸ் கமிஷனராக மூன்று ஆண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார். 1999இல், சூட் மொரீஷியஸ் அரசாங்கத்தின் போலீஸ் ஆலோசகராக பணியாற்ற மொரீஷியஸ் சென்றார். பெங்களூரு போக்குவரத்து காவல்துறையில் கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் சூட் பணியாற்றியுள்ளார்.