2 பேரை கொன்ற போர்ஷே விபத்து: 4 நகரங்கள், புதிய சிம் கார்டு என தப்பிக்க முயன்ற தொழிலதிபர் தந்தை
ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளரான விஷால் அகர்வாலின் 17 வயது மகன் குடிபோதையில் போர்ஷே கார்-ஐ ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக, நேற்று புனே காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் இந்த கைதில் இருந்து எப்படி தப்பிக்க முயன்றார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் புனேயில் 17 வயது சிறுவன் குடிபோதையில் தனது போர்ஷை அதிக வேகமாக ஒட்டி, பைக் மீது மோதியதில், இரண்டு நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிறுவனின் தந்தை விஷால் அகர்வாலை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர். விபத்தைத் தொடர்ந்து, விஷால் அகர்வாலுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக தப்பிக்கத் திட்டமிட்டார்.
FIR பதிவு செய்தது தெரிந்ததும் தப்பிக்க முயன்ற தொழிலதிபர்
FIR பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும், அகர்வால் முதலில் புனேவில் உள்ள தனது பண்ணை வீடு உட்பட, காரில் மாறி மாறி சென்றுள்ளார். பின்னர் அவர் கோலாப்பூருக்குச் சென்று, அங்கு அவர் ஒரு நண்பரை சந்தித்துள்ளார். கோலாப்பூரில் இருந்து, அதிகாரிகளை தவறாக வழிநடத்த அகர்வால், தனது டிரைவரையும் காரையும் மும்பைக்கு அனுப்பினார். அதே நேரத்தில் அவரோ தனது நண்பரின் காரில் சம்பாஜிநகருக்கு பயணம் செய்தார். போலீஸ்காரர்களிடமிருந்து தப்பிக்க அவர் மும்பைக்குச் செல்வதாகக் கூறி, அவர் இருக்கும் இடத்தைப் பற்றி அவரது குடும்பத்தினருக்கு தவறான தகவல்களை வழிநெடுகிலும் தெரிவித்துள்ளார். அகர்வால் தனது தொலைபேசியை அணைத்துவிட்டு, கண்காணிப்பைத் தவிர்க்க புதிய எண்ணைப் பயன்படுத்தத் தொடங்கினார். இறுதியில் நண்பரின் காரின் ஜிபிஎஸ் மூலம் அவரது நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்து அகர்வாலை கைது செய்த புனே காவல்துறை
புனே குற்றப்பிரிவு குழுக்கள் அகர்வாலை கண்டுபிடிக்க தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் ஜிபிஎஸ் டிராக்கிங்கைப் பயன்படுத்தினர். அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் மற்றும் அகர்வால் அவரது குடும்பத்தினருக்கு அனுப்பிய செய்திகளை ட்ராக் செய்தனர். இறுதியில், அவர் சம்பாஜிநகரில் உள்ள ஒரு சிறிய லாட்ஜில் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அகர்வாலின் 17 வயது மகன் புனேயில் கார் விபத்தினை ஏற்படுத்தியதில், இருவர் உயிரிழந்தனர். அவன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்ததை கொண்டாட அன்றிரவு நண்பர்களுடன் பாரில் மது அருந்திவிட்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளார். இதில் இரண்டு IT ஊழியர்கள் - அனீஷ் அவதியா மற்றும் அவரது தோழி அஷ்வினி கோஷ்தா - இறந்தனர்.