பூஞ்ச் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக மொபைல் இன்டர்நெட் முடக்கம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச்பகுதியில் கடந்த வியாழக்கிழமை திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 3 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான முயற்சிகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்துள்ளதால், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் நேற்று முடக்கப்பட்டன. அப்பகுதியில் வான்வழி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக பூஞ்ச் மாவட்டத்தின் ரஜோரி செக்டாரில் உள்ள தேரா கி கலி வனப்பகுதியில் ராணுவம் தரைவழி கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3:45 மணிக்கு தாத்யார் மோர் அருகே உள்ள ஒரு வளைவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வாகனங்கள் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலின் விவரங்கள்
இந்த பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி(PAFF) பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்தியதாக சமூக வலைதளத்தில் PAFF பதிவிட்டுள்ளது. எம்4 கார்பைன் என்பது, 1980களில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஒரு இலகுரக, வாயுவால் இயங்கும் கார்பைன் துப்பாக்கி ஆகும். அமெரிக்க ராணுவத்திற்கு முதன்மையான ஆயுதமாக திகழ்ந்த இது, உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தத்யார் மோர்ஹ் குருட்டு வளைவுபகுதியில் இருக்கும் குண்டும் குழியுமான சாலை காரணமாக அந்த இடத்தில் பொதுவாக ராணுவ வாகனங்கள் மெதுவாகச் செல்லுமாம். அதை அறிந்த பயங்கரவாதிகள் அந்த பகுதியில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.