
புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100% கட்டண விலக்கு: கவர்னர் ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கல்விக் கட்டண விலக்கு அளிக்கும் திட்டத்திற்கு ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த முடிவால் புதுச்சேரி அரசு கல்லூரிகளில் படிக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயனடைவார்கள். இந்த கல்வி உதவித்தொகை 2024-25-ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.
அம்சங்கள்
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
புதுவை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் (CENTAC கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்) படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இது பொருந்தும். உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கவும், மாணவர்களுக்கு நிதி நெருக்கடி தடையாக இருப்பதை தவிர்க்கும் வகையிலும் அரசு இந்தக் கொள்கை முடிவை எடுத்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீதம் கல்வி கட்டண விலக்கு (கல்வி நிதியுதவி) அளிக்கப்படுகிறது. அரசின் இந்தக் கொள்கை முடிவு, அனைத்து தொழில்முறை (Professional) மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கான நிர்வாகத் துறைகளுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கிறது.
நடைமுறைகள்
நிர்வாக நடைமுறைகள்
உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், சலுகை வழங்கும் நடைமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது: சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் தங்கள் நிறுவனங்களின் நிதி சார்பு விவரங்களை பெற வேண்டும். மானிய உதவிக்கான தங்கள் கணக்குத் தேவைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து, அதற்கேற்ப நிதியை விடுவிப்பதற்கு தகுதிவாய்ந்த அதிகாரிகளின் ஒப்புதலை பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரிக்கு, 2022-23 கல்வி ஆண்டு முதல் புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் காமராஜர் பொறியியல் கல்லூரிகளுக்கு இணையாகக் கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.