ஏப்.19-ல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார். புதுச்சேரியிலும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேதிகள்:- வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் தேதி: மார்ச் 20 வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி: மார்ச் 27 வேட்புமனுக்கள் பரிசீலனை: மார்ச் 28 வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி: மார்ச் 30 வாக்குப்பதிவு தேதி: ஏப்ரல் 19 வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4
விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள்(MCC) என்பது தேர்தல்களுக்கு முன் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை ஒழுங்குபடுத்துவதற்காக வழங்கப்படும் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும். தேர்தல் பிரச்சாரங்களின் போது நடந்துகொள்ள வேண்டும், தேர்தல் விளம்பரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உட்பட பல வழிகாட்டுதல்கள் இதில் வழங்கப்படுகிறது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.