'மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது; எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இல்லை': அமித்ஷா
மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று 2-வது நாளாக மக்களவையில் நடைபெற்றது. இன்று காலை, 12 மணியளவில் ராகுல் காந்தி மக்களவையில், விவாதத்தை தொடங்கி வைத்தார். மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடியை தாக்கி பேசிய ராகுல் காந்தி, "நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு செல்லவில்லை. பிரதமர் மோடி மணிப்பூரை ஹிந்துஸ்தானின் ஒரு பகுதியாக கருதவில்லை. மணிப்பூரை பிரதமர் இரண்டாக பிரித்துவிட்டார்" என்று கூறினார்.
"நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டது": அமித் ஷா
இதை தொடர்ந்து இன்று மாலை, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராகவும், ஆளும் கட்சியின் சார்பாகவும் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, எதிர்க்கட்சிகளின் உண்மையான குணத்தை காட்டும் என தொடங்கி,"சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமான பிரதமர் என்றால் அது நரேந்திர மோடிதான். நான் இதைச் சொல்லவில்லை, உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட ஏராளமான சர்வேகள் அப்படித்தான் சொல்கின்றன" என பிரதமரை புகழ்ந்தார். "இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பதால், அந்த (காங்கிரஸ்) அரசு செய்த பணிகளை நான் குறிப்பிட விரும்புகிறேன்."என்று கூறினார்.
மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது
இதை தொடர்ந்து மணிப்பூர் வன்முறை குறித்து முதல் முறையாக மக்களவையில் பேசிய அமித்ஷா, "மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது, அதை அரசியலாக்குவது அதைவிட வெட்கக்கேடானது" எனக்கூறினார். தொடர்ந்து,"மே 3 வரை, கடந்த 6 ஆண்டுகளில், மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பந்த் இல்லை, முற்றுகை இல்லை. கிளர்ச்சி வன்முறை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அந்த சூழ்நிலையில், அண்டை நாடான மியான்மரில் குக்கி ஜனநாயக முன்னணியை சேர்ந்த இராணுவத் அரசாங்கம் பதவிக்கு வந்தது. மியான்மர் எல்லையில் சுற்றுச்சுவர் இல்லாததால், மியான்மரை சேர்ந்த குக்கி சகோதரர்கள் மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு வரத் தொடங்கினர். இதுவே மோதல்களுக்கு வழிவகுத்தது" என்று வன்முறைக்கான காரணத்தை கூறினார்.
எதிர்கட்சிகளிடம் அமித்ஷா வேண்டுகோள்
தொடர்ந்து பேசிய அமித்ஷா, மணிப்பூரில் தற்போது வன்முறை குறைந்து வருகிறது என்றும், எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம் என்று எதிர் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறினார். மேலும், "ராகுல் காந்தி அரசியல் செய்ய மணிப்பூர் சென்றார். ராகுல் காந்தியை ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூருக்குச் செல்லும்படி நாங்கள் கேட்டுக் கொண்டோம், ஆனால், அவர் எங்களை எதிர்த்து, சாலை வழியை தேர்ந்தெடுத்தார். அதன் பிறகுதான், அவரை மணிப்பூர் போலீசார் தடுத்து நிறுத்தினர்," என்று விளக்கம் அளித்தார். "முதல் நாளிலிருந்தே, மணிப்பூர் குறித்து விவாதிக்க நான் தயாராகதான் இருந்தேன். ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த விவாதத்தை விரும்பவில்லை. நான் பேசுவதை எதிர்க்கட்சிகள் கேட்க விரும்பவில்லை" எனவும் உள்துறை அமைச்சர் கூறினார்.
கலவரத்திற்கு வித்திட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் பதற்றத்திற்கு மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். "ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு தான் நிலைமையை மோசமாக்கியது" என்று கூறிய அவர், "அந்த உத்தரவு, மெய்த்தே சமூகத்தை பழங்குடியின(ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியது." என்று தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூரில் முதலமைச்சர், மத்திய அரசிற்கு முழு ஒத்துழைப்பு தந்து வருவதால், அவரை மாற்றும் தேவை ஏற்படவில்லை எனவும் அமித் ஷா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். நாளை பிரதமர் மோடி, நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பதிலளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.