"மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா
மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை, 12 மணியளவில் ராகுல் காந்தி மக்களவைக்கு வந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மத்திய அரசை நோக்கி குற்றசாட்டுகளை தொடுத்தார் ராகுல் காந்தி. மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடியை தாக்கி பேசிய ராகுல் காந்தி, "நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு செல்லவில்லை. பிரதமர் மோடி மணிப்பூரை ஹிந்துஸ்தானின் ஒரு பகுதியாக கருதவில்லை. மணிப்பூரை பிரதமர் இரண்டாக பிரித்துவிட்டார்" என்று கூறினார். மேலும்,"மணிப்பூரில் பாரத மாதாவைக் கொன்றுவிட்டீர்கள். மணிப்பூர் மக்களைக் கொன்றுவிட்டீர்கள். இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, நீங்கள் துரோகிகள்" என்று பாஜகவை சாடினார்.
"நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டது": அமித் ஷா
ராகுல் காந்தி தனது உரையை முடித்தபிறகு, மாலை 5-மணி அளவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது உரையை தொடங்கினார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, எதிர்க்கட்சிகளின் உண்மையான குணத்தை காட்டும் என தொடங்கிய அமித்ஷா,"சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமான பிரதமர் என்றால் அது நரேந்திர மோடிதான். நான் இதைச் சொல்லவில்லை, உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட ஏராளமான சர்வேகள் அப்படித்தான் சொல்கின்றன" என பிரதமரை புகழ்ந்தார். "இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பதால், அந்த (காங்கிரஸ்) அரசு செய்த பணிகளை நான் குறிப்பிட விரும்புகிறேன்." என்று தற்போது மக்களவையில் பேசி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.