முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண்
தெலுங்கானா அரசியல்வாதி ஒய்.எஸ்.ஷர்மிளா, முதல்வர் கே.சந்திரசேகர் ராவை(KCR) தன்னுடன் ஒரு நாள் நடந்து சென்று மக்கள் பிரச்சனைகளை நேரில் காணும்படி சவால் விடுத்துள்ளார். தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவை சவாலுக்கு அழைத்த அவர் ஒரு ஷூவைப் பரிசாக வழங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார். "இன்று, KCRக்கு ஒரு சவால், நான் வழங்கும் இந்த ஷூவை போட்டுகொண்டு அவர் என்னோடு பாதயாத்திரையில் கலந்துகொள்ள வேண்டும்." என்று கூறிய அவர், ஷூ பெட்டியையும் செய்தியாளர்களிடம் காட்டினார். மேலும் அவர், "இது உங்கள் சைஸுக்கு தான் வாங்கப்பட்டிருக்கிறது. ஷூ பொருந்தவில்லை என்றால் அவற்றை மாற்றுவதற்கான பில்லும் உள்ளே இருக்கிறது," என்று கிண்டல் செய்தார்.
தோற்றுவிட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: ஷர்மிளா
மக்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்பது நிரூபணமானால், அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொண்டு ஓய்வு பெற்றுக்கொள்வதாகவும் ஷர்மிளா தெரிவித்தார். அப்படி இல்லையென்றால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தெலுங்கானா மக்களிடம் KCR மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். "இது பொற்காலம் என்று KCR சொல்வது போல், தெலுங்கானா மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால், அவர் சொல்வது போல், எனது மக்கள் வறுமையில் வாடவில்லை என்றால், நான் திரு KCRரிடம் மன்னிப்புக் கேட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெற்று கொள்கிறேன்." என்று ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் தெலுங்கானா தேர்தலை முன்னிட்டு ஷர்மிளா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.