விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்
திருவண்ணாமலை செய்யாறு அருகேயுள்ள மேல்மா சிப்காட் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சியில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கிய நிலையில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதனை மீறி பணிகள் தொடர்ந்து நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிப்காட் விரிவாக்கப்பணியினை கைவிடக்கோரி கடந்த ஜூலையில் துவங்கிய காத்திருப்புப்போராட்டம் 126 நாட்களாக தொடர்ந்து நடந்தது. போராட்டத்தை முன்நின்று நடத்திய 20 விவசாயிகளை காவல்துறை கைது செய்தது. அதன்படி அவர்களுள் பச்சையப்பன், அருள் ஆறுமுகம், தேவன், பாக்யராஜ், மாசிலாமணி, விஜயன், சோழன் உள்ளிட்ட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கு பாமக, நாம் தமிழர், அதிமுக, பா.ஜ.க.,உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலையில் நாளை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்
மேலும், இந்த விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக்கோரி நாளை(நவ.,18)பா.ஜ.க.,சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த குண்டர் சட்டத்தை போட்டதற்கான காரணம் குறித்து காவல்துறை தனது விளக்கத்தினை அளித்துள்ளது. அவர்கள் கூறியதாவது, குறிப்பிட்ட அந்த 7 பேரும் அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் அவர்கள் 7 பேரும் எட்டுவழி சாலை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள்"என்று கூறியுள்ளனர். தொடர்ந்து, "சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான அருள் ஆறுமுகம் கிட்டத்தட்ட 8 மாதங்களாக செய்யாறு பகுதியில் தங்கி அங்குள்ள மக்களை தூண்டிவிட்டுள்ளார்" என்றும், "இவர்கள் 7 பேரும் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றும் விளக்கமளித்துள்ளனர்.