இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி
வரும் மே மாதம் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடகா வரவுள்ளார். மார்ச் 25ஆம் தேதி அன்று கர்நாடகா வரும் பிரதமர், மெட்ரோ திறப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மே மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் நாட்களில் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, சிக்கபல்லாபுரா, பெங்களூரு மற்றும் தாவங்கரே மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார்.
கர்நாடகாவில் பாஜகவின் மெகா பொதுக்கூட்டம்
அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, மார்ச் 25ஆம் தேதி காலை ஹெலிகாப்டரில் சிக்கபல்லாபுராவுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைத் பிரதமர் திறந்து வைப்பார். பின்னர், வைட்ஃபீல்ட் மெட்ரோ பாதையை திறந்து வைப்பதற்காக அவர் பிற்பகலில் பெங்களூரு திரும்புவார். அதன் பின், அவர் அதே மெட்ரோவில் சவாரி செய்வார். அதனையடுத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தாவங்கேருக்கு செல்லும் பிரதமர் மோடி, அதை முடித்துவிட்டு ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்படுவார். பொதுக்கூட்டம் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் பகிரப்படவில்லை என்றாலும், கர்நாடகாவில் ஆளும் பாஜகவின் தேர்தல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த மெகா பொதுக்கூட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.