ஆசியாவின் மிக பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை கர்நாடாகா, குப்பி தாலுகாவில் உள்ள பிடரேஹல்லா கவலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 6) திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கிறார். 615 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிரீன்ஃபீல்ட் ஹெலிகாப்டர் தொழிற்சாலை, இந்தியாவின் மொத்த ஹெலிகாப்டர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையான இது, முதலில் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை(LUH) தயாரிக்கும். ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்கள் என்ற கணக்கில் ஹெலிகாப்டர் உற்பத்தி இங்கு தொடங்கும். முதல் LUH ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டு, வெளியிட தயாராக உள்ளது. போர் ஹெலிகாப்டர்கள்(LCH) மற்றும் மல்டிரோல் ஹெலிகாப்டர்கள்(IMRH) போன்ற பிற ஹெலிகாப்டர்களை தயாரிக்க தொழிற்சாலை விரிவுபடுத்தப்படும்.
இன்று நடக்கவிருக்கும் திறப்புவிழா நிகழ்வுகள்
இது வருங்காலத்தில் LCH, LUH, சிவில் அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்கள்(ALH) மற்றும் IMRH ஆகியவற்றின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைப்புக்காகவும் பயன்படுத்தப்படும். சிவில் LUHஇன் ஏற்றுமதிகளும் இந்தத் தொழிற்சாலையிலிருந்து வழங்கப்படும். இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி 2016ல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10:55 மணிக்கு பெங்களூரு HAL விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்திற்கு(BIEC) பயணம் செய்வார். BIECஇல், அவர் இந்திய எரிசக்தி வாரத்தைத் தொடங்கி வைத்த பின், காலை 11:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை திறப்பு விழா நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்துள்ளது.