பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை(மார் 12) திறந்து வைக்க உள்ளார். இந்த விரைவுச் சாலை இரண்டு நகரங்களுக்கு இடையேயான சாலைப் பயணத்தை எளிதாக்கும் என்றும் பெங்களூரு மற்றும் மைசூரு இடையே உள்ள நகரங்களுக்கு சுமூகமான இணைப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 119 கிலோமீட்டர்கள் கொண்ட இந்த அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் 2018 இல் நாட்டப்பட்டது. இதன் முழுமையான கட்டுமானத்தை முடிக்க கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆனது. பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையை கட்டுவதற்கு ரூ. 8,478 கோடி செலவானது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையில் கூடுதலாக இரு சர்விஸ் ரோடுகளும் உள்ளன.
இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை
இதனால், பெங்களூரு மற்றும் மைசூரு இடையிலான பயண நேரம் 75 நிமிடங்களாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நகரங்களுக்கும் இடையில் பயணம் செய்ய தோராயமாக மூன்று மணிநேரம் ஆகும். இது பாரத்மாலா பரியோஜனா (BMP) எனப்படும் இந்திய அரசின் முதன்மைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. பெங்களூரு-மைசூரு பயணங்களுக்கு மட்டுமின்றி, இந்த விரைவுச்சாலை பெங்களூருவிலிருந்து குடகு மலை, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் வயநாடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கான பயணத்தையும் துரிதப்படுத்தும். இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் இந்த ஆறு வழிச்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படாது என்றும் கூடுதல் சர்விஸ் ரோடுகளை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த சாலைக்கான பெயர் இன்னும் வைக்கப்படவில்லை.