முதலமைச்சர்களுடன் பிரதமர் விர்ச்சுவல் சந்திப்பு: எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்க 'டீம் இந்தியா' வியூகம்!
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 6:30 மணியளவில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 'மாதிரி நடத்தை விதிமுறைகள்' (Model Code of Conduct) அமலில் இருப்பதால், அந்த மாநில முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் அமைச்சரவை செயலகம் (Cabinet Secretariat) தனியாக ஆலோசனை நடத்தும்.
நோக்கங்கள்
கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
எரிசக்தி பாதுகாப்பு: ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இந்தியாவின் எல்பிஜி (LPG), கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்தல். ஒருங்கிணைந்த நடவடிக்கை: மத்திய - மாநில அரசுகள் இணைந்து 'டீம் இந்தியா' (Team India) உணர்வுடன் செயல்பட்டு, உள்நாட்டு ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல். இந்தியர்கள் பாதுகாப்பு: போர் பாதித்த பகுதிகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர்களுக்கு விளக்குதல். நாட்டின் மொத்த எரிசக்தி சேமிப்புத் திறன், தற்போதைய சூழலில் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பெட்ரோலிய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள முதலமைச்சர்கள் கூட்டத்தில், வரும் மாதங்களுக்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.