பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி; இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல்
பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் வியாழக்கிழமை (அக்டோபர் 19) தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, காசா மருத்துவமனையில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்தார். பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் மோடி அப்போது உறுதியளித்தார். மேலும், பிராந்தியத்தில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்தும் அவர் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டார். போர் வெடித்த பிறகு பாலஸ்தீன தலைவருடன் பிரதமர் மோடி பேசுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்திலும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு
பிரதமர் மோடி பாலஸ்தீன அதிபருடனான தனது உரையாடலில், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசாங்கம் மோதலில் இரு தரப்பையும் வெளிப்படையாக ஆதரிப்பதைத் தவிர்த்துள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சகம் பாலஸ்தீன நாடு அமைப்பதற்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் மோடி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசி, அப்போது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக தனது ஆதரவை வெளிப்படுத்தினார். ஹமாஸ் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பானது, பாலத்தீனத்திற்கு சொந்தமான காசா பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.