சீன எல்லைக்கு ராணுவத்தை அனுப்பியது பிரதமர் மோடி தான், ராகுல் காந்தி அல்ல: அமைச்சர்
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையின் மீது சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து அரசாங்கத்தை குறிவைத்து பேசிவரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவத்தை இந்திய எல்லைக்கு அனுப்பியது காங்கிரஸ் தலைவர் அல்ல, பிரதமர் மோடிதான் என்று கூறி இருக்கிறார். ANIக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை பாதுகாப்பை அதிகரிக்க மோடி அரசாங்கம் பட்ஜெட்டை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது என்றார். இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள பாங்காங் பாலம் சீன கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்திருக்கிறது. இதை பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், 1962இல் நடந்த போருக்குப் பிறகில் இருந்து தான் அந்தப் பகுதி சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்றார்.
பேட்டியின் போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
எப்போது அந்த பகுதி சீனாவின் பிடிக்கு சென்றது? 'C' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளில் அவர்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறன். அவர்கள்(காங்கிரஸ்) வேண்டுமென்றே நிலைமையை தவறாக சித்தரிக்கிறார்கள்.. முதன்முதலில் சீனர்கள் 1958இல் அந்த பகுதிக்கு வந்தனர். பின், அக்டோபர் 1962இல் அதை அவர்கள் கைப்பற்றினர். 1962இல் அந்த பாலத்தை சீனா கைப்பற்றியதற்கு, 2023ல் ஆளும் மோடி அரசைக் குறை சொல்கிறீர்கள். அது எப்போது நடந்தது என்ற உண்மையை சொல்ல உங்களால் முடியவில்லை. இந்திய இராணுவத்தை LACக்கு(உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு) அனுப்பிய நாங்கள் இணக்கமாக இருந்தோமா என்று நான் மக்களிடம் கேட்கிறேன். நமது வரலாற்றிலேயே சீன எல்லையில் அமைதிக் காலம் நிகழ்வது இப்போது தான். என்று கூறியுள்ளார்.