பிரதமர் மோடியின் அரசு முறை பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் வரவிருக்கும் அமெரிக்க அரசு முறைப் பயணம், உலக விவகாரங்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று மூத்த அமெரிக்க தூதர் அதுல் கேஷாப் நேற்று(ஜூன் 12) தெரிவித்தார். இந்த பயணம் "உண்மையில் ஒரு முக்கியமான விஷயம்" என்று மேலும் கூறிய யுஎஸ்-இந்திய பிசினஸ் கவுன்சிலின்(யுஎஸ்ஐபிசி) தலைவர் கேஷப், "இது அமெரிக்க மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்" என்று தெரிவித்துள்ளார். இதுவரை இரு இந்திய தலைவர்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருக்கின்றனர். ஜூன் 1963இல் இந்திய குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடிக்கு அரசு விருந்து அளிக்க இருக்கும் அதிபர் ஜோ பைடன்
அதன்பிறகு, நவம்பர் 2009இல் பிரதமர் மன்மோகன் சிங் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த வரிசையில் தற்போது பிரதமர் மோடியும் இடம் பிடிக்க இருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு அரசு விருந்து அளிக்க உள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இந்த வாரம் இதற்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.