ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழா-காணொளியில் மோடி உரை
வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழா இன்று(அக்.,5) சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் நடந்தது. அப்போது வள்ளலாரின் திருவுருவ சிலையினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசுகையில், தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இளைஞர்கள் புலமையடைய வேண்டும் என்று வள்ளலார் விருப்பம் கொண்டிருந்தார். அதன்படி கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா கல்வி கட்டமைப்பில் மாபெரும் வளர்ச்சியினை அடைந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையினையும் இந்தியா 3 தசாப்தங்களுக்கு பிறகு பெற்றுள்ளது. இந்த கொள்கை மூலம் முழு கல்வித்துறையிலும் சிறந்த மாற்றம் ஏற்படும் என்று பேசியுள்ளார்.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டினை நிச்சயம் பாராட்டியிருப்பார் - மோடி
அதேபோல், தேசிய கல்வி கொள்கை புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி, சிந்தனை உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர், கடந்த 9 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்டவை அதிகளவு உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் அவர், வள்ளலாருக்கு மரியாதை செலுத்தும்போது தனது உறுதிபாடு வலுவடைகிறது என்றும், தற்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் லோக்சபா மற்றும் சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டினை நிச்சயம் பாராட்டியிருப்பார் என நம்புவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, வள்ளலாரின் அன்பு, இரக்கம், நீதி உள்ளிட்ட போதனைகளை பரப்ப வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியினை வழங்குவதோடு, யாரும் பட்னியுடன் இல்லாதிருக்க வேண்டும் என்பதனையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.