அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் பராக்ரம் திவாஸ் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன 23) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை சூட்டினார். அந்த யூனியன் பிரதேசத்தில் நடந்த இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்மொழியப்பட்ட நேதாஜி நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி மெய்நிகராக வெளியிட்டார். பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரிடப்பட்ட 21 தீவுகள் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு அந்தமான் மாவட்டங்களில் அமைந்துள்ளன என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள நினைவுச்சின்னம்
இந்த 21 தீவுகளில் மிக பெரிய தீவிற்கு முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் நவம்பர் 3, 1947இல் காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்தவர ஆவார். மேலும், நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள நினைவுச்சின்னத்தின் மாதிரியையும் இந்த விழாவில் பிரதமர் திறந்து வைத்தார். இது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவில்(முன்னர் ராஸ் தீவு என்று அழைக்கப்பட்டது) கட்டப்படும். இந்த தீவின் பெயர் 2018 இல் மாற்றப்பட்டது. இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகம், லேசர் மற்றும் ஒலி காட்சி, கேபிள் கார் ரோப்வே, வரலாற்று கட்டிடங்கள் வழியாக வழிகாட்டப்பட்ட பாரம்பரிய பாதை, குழந்தைகள் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரெட்ரோ-லவுஞ்ச் ஆகியவை இருக்கும் என்று கூறப்படுகிறது.