கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(மார்ச்.,25) கர்நாடகா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்த அவர், எச்.ஏ.எல்.விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அமைந்துள்ள மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல்வர் பசவராஜ்பொம்மை முன்னிலையில் மோடி திறந்துவைத்தார். மாணவர்களுக்கு புதிய வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க உதவும் ஓர் முன்முயற்சியாகவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நடவடிக்கையாகவும் இந்த ஆராய்ச்சி நிறுவனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள இந்நிறுவனம் மருத்துவ கல்வி மற்றும் தரமான மருத்துவ வசதிகளை கட்டணமின்றி வழங்கவுள்ளது. இந்நிறுவனமானது 2023ம் கல்வியாண்டில் இருந்து செயல்பட துவங்கும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையினை துவக்கி வைத்தார் மோடி
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் பெங்களூருவில் ஒயிட்ஃபீல்ட்-கிருஷ்ணராஜபுரம் இடையேயான 13.71 கி.மீ., தூரத்தினை கடக்க கூடிய மெட்ரோ ரயில் சேவையினையும் துவக்கி வைத்தார். மேலும் அந்த ரயில் பணியாளர்களுடன் ரயிலில் பயணமும் செய்தார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரூ.4,250 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் பெங்களூரு நகர பயணிகளுக்கு விரைவான மற்றும் வசதியான பயண அனுபவத்தினை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ரயில் சேவையால் போக்குவரத்து நெரிசலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.