85% இறக்குமதி பாதிப்பு! நள்ளிரவில் பிரதமர் மோடி நடத்திய உயர்மட்டக் கூட்டம்; கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க மெகா பிளான்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், சாமானிய மக்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் ஒரு மூலோபாயத் திட்டத்தை அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் சவால்
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கமும் இந்தியாவின் சவாலும்
இந்தியாவின் எரிவாயுத் தேவையில் 62% இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எரிவாயுவில் 85% முதல் 90% வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையிலான மோதலால் இந்தப் போக்குவரத்து பாதை முடக்கப்பட்டுள்ளது. இதனால் விநியோகத்தில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கைகள்
அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்
இந்தியாவின் ஆண்டு எல்பிஜி நுகர்வு சுமார் 31.3 மில்லியன் டன். இதில் 87% வீட்டு உபயோகத்திற்கும், 13% வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. தட்டுப்பாட்டைச் சமாளிக்க அரசு எடுத்துள்ள முடிவுகள் பின்வருமாறு: சாமானிய மக்களைப் பாதுகாக்க, கிடைக்கும் எரிவாயுவில் பெரும்பகுதி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கே ஒதுக்கப்படும். சிலிண்டர் பதுக்கலைத் தடுக்க, அடுத்தடுத்த சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21லிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விநியோகம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் ஹோட்டல் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் மூன்று செயல் இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை ஆராய்ந்து, அவசியத்தைப் பொறுத்து எரிவாயுவை ஒதுக்கீடு செய்யும்.
விதிவிலக்கு
அத்தியாவசியத் துறைகளுக்கு விதிவிலக்கு
மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு விநியோகத்தில் எவ்விதத் தடையுமின்றி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பெட்ரோகெமிக்கல் உற்பத்தியைக் குறைத்து, எல்பிஜி உற்பத்தியை அதிகப்படுத்துமாறு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புவிசார் அரசியல் பதற்றம் தணியும் வரை, மாற்று நாடுகளிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் முயற்சிகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.