பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள்
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து மாறிவரும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு மத்தியில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி இன்று(ஜன 25) பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்தார் என்று ANI தெரிவித்துள்ளது. பயங்கரவாத பிரச்சினையை கையாள்வதுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. நாளை(ஜன 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எல்-சிசி நேற்று புது டெல்லி வந்தடைந்தார். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் உலகப் பொருளாதாரச் சரிவிற்கு மத்தியில் எல்-சிசியின் இந்த வருகை பல வகையில் முக்கியமானதாக கருதப்படுகிறது. 2023ல் இந்தியாவின் தலைமையில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளில் எகிப்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும் எகிப்தும் ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன
எல்-சிசி உடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து, மனித குலத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது பயங்கரவாதம் தான் என்பதை இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதாக மோடி தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, இளைஞர்கள் பிரச்சினைகள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் டாலர்களாக உயர்த்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இருதரப்பு உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக எல்-சிசி தெரிவித்திருக்கிறார். கூடுதலாக, இந்திய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எகிப்து விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.