LOADING...
டிரம்ப் நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

டிரம்ப் நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 26, 2026
10:39 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப், முதற்பெண்மணி மெலனியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் பத்திரமாக இருப்பதை அறிந்து தான் நிம்மதியடைந்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும், இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பின்னணி

தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன?

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புச் சோதனையின் போது, ஆயுதங்களுடன் நுழைந்த நபர் ஒருவர் ரகசியப் பாதுகாப்புப் படை அதிகாரி மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, புல்லட் புரூஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் அந்த அதிகாரி உயிர் தப்பினார். உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர், அந்த நபரைச் சுட்டு வீழ்த்தித் தாக்குதலைத் தடுத்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபரை "மனநலம் பாதிக்கப்பட்ட நபர்" என்று டொனால்ட் டிரம்ப் வர்ணித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் தனியாகவே செயல்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பதற்றம்

அரங்கத்தில் நிலவிய பதற்றம்

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் 2,600-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் நிறைந்த அந்த அரங்கம் பதற்றத்தில் ஆழ்ந்தது. "கீழே குனியுங்கள்" என்ற குரல்கள் ஒலித்தன. மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரால் தரையில் தள்ளப்பட்டுப் பாதுகாக்கப்பட்டனர். அதிபரும் அவரது மனைவியும் மேடைக்குப் பின்னால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே பாதுகாப்புப் படையினர் முழுமையாகக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தனர்.

Advertisement

வரலாறு

வரலாற்று நிகழ்வுகளும் தொடரும் அச்சமும்

டிரம்ப் மீதான இந்தத் தாக்குதல் முயற்சி, 2024 ஆம் ஆண்டு அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த இரண்டு கொலை முயற்சிகளை நினைவுபடுத்துவதாக உள்ளது. மேலும், 1981 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் சுடப்பட்ட அதே ஹோட்டலில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல் குறித்த பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. அதிபர் டிரம்ப் இந்த நிகழ்ச்சியை 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சிக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement