இந்திய கடற்படையில் ஒரே நேரத்தில் 3 புதிய உள்நாட்டுப் போர்க்கப்பல்கள்! நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன கடற்படைக் கப்பல்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 22) கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாகக் கடற்படையில் இணைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஐஎன்எஸ் துணாகிரி என்ற அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல், ஐஎன்எஸ் சன்சோதக் என்ற பெரிய அளவிலான ஆய்வுக்கப்பல் மற்றும் ஐஎன்எஸ் அக்ரே என்ற நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் ஆகிய கப்பல்களே இன்று இணைக்கப்பட்டுள்ளன.
சுயசார்பு பாரதம்
ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் உருவான கப்பல்கள்
கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த மூன்று கப்பல்களும், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கடல்சார் தளவாடங்களும் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது இதன் மிக முக்கிய சிறப்பம்சமாகும். இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் இந்தியாவின் 200 க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் நேரடியாகப் பங்களித்து, உள்நாட்டு வேலைவாய்ப்புகளையும் உற்பத்தித் திறனையும் பெருமளவில் உயர்த்தியுள்ளன.
ஐஎன்எஸ் துணாகிரி
எதிரிகளின் இலக்குகளைத் தவிடுபொடியாக்கும் ஐஎன்எஸ் துணாகிரி
ப்ராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஐந்தாவது அதிநவீன ஸ்டெல்த் ரகப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் துணாகிரி, எதிரிகளின் ரேடார்களில் எளிதில் சிக்காத அதிநவீன வடிவமைப்பு அமைப்பைக் கொண்டது. இந்த போர்க்கப்பலில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒலியின் வேகத்தை விட அதிவேகமாகச் செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆழ்கடல் போர்ச் சூழலில் எதிரிகளின் கப்பல்களையும், வான்வழித் தாக்குதல்களையும் ஒரே நேரத்தில் துல்லியமாகத் தவிடுபொடியாக்கும் ஆற்றல் இந்த அதிநவீன போர்க்கப்பலுக்கு உண்டு.
ஐஎன்எஸ் சன்சோதக்
கடல்சார் வரைபடங்களை உருவாக்கும் ஐஎன்எஸ் சன்சோதக்
பெரிய ரக ஆய்வுக் கப்பல்கள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள நான்காவது கப்பலான ஐஎன்எஸ் சன்சோதக், ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் விரிவான நீர்நிலை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சிவில் பயன்பாடுகளுக்காகப் பெருங்கடலின் புவி இயற்பியல் மற்றும் கடல்சார் தரவுகளை சேகரிக்கும் அதிநவீனத் கருவிகள் இதில் உள்ளன. குறிப்பாக, மனிதர்கள் இல்லாமல் தானாகவே நீருக்கடியில் இயங்கும் அட்டானமஸ் அண்டர்வாட்டர் வாகனங்கள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் கருவிகள் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் இந்த ஆய்வுக் கப்பலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
ஐஎன்எஸ் அக்ரே
நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் ஐஎன்எஸ் அக்ரே
அர்னாலா கிளாஸ் திட்டத்தின் கீழ் ஆழமற்ற கடற்பகுதிகளில் இயங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் தான் இந்த ஐஎன்எஸ் அக்ரே ஆகும். இந்தியாவின் நீண்ட கடலோரப் பகுதிகள் மற்றும் முக்கியத் துறைமுகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இக்கப்பல் மிக முக்கியப் பங்கு வகிக்கும். எதிரிகளின் அணுசக்தி மற்றும் சாதாரண நீர்மூழ்கிக் கப்பல்களைக் கடலுக்கு அடியிலேயே கண்டறியும் ஆழமற்ற நீர் சோனார் அமைப்புகள், எடை குறைந்த டார்பிடோக்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் போன்ற அதிநவீனத் தாக்குதல் ஆயுதங்கள் இக்கப்பலில் நிரம்பியுள்ளன.
பிரதமர் உரை
"இந்தியா இனி உலகிற்கான சந்தை அல்ல" - பிரதமர் மோடி உரை
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, "இந்த மூன்று கப்பல்களும் இந்தியாவின் மூன்று முக்கியமான தற்சார்பு தீர்மானங்களின் அடையாளங்களாகும். இந்தியா இனி பாதுகாப்புத் துறையில் வெறும் நுகர்வோராகவோ அல்லது வாங்குபவராகவோ மட்டும் இருக்க விரும்பவில்லை. நமது ராணுவப் பலம் என்பது உலக நாடுகள் தங்களின் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒரு உலகச் சந்தையாக மாற முடியாது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் தொடங்கிய நமது தற்சார்புப் பயணம், இன்று இந்த 3 புதிய போர்க்கப்பல்களின் சேர்க்கை மூலம் கடல்சார் பொருளாதார மற்றும் மூலோபாயப் பாதுகாப்பில் புதிய வேகத்தைப் பெற்றுள்ளது." என்று மிக ஆக்ரோஷமாக உரையாற்றினார்.