ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி முதுமலை வருகிறார்
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய கட்டிடம் ஒன்றின் திறப்புவிழா வரும் ஏப்ரல் மாதம் 8ம்தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வருகிறார். அதனுடன் அன்றைய தினமே சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையினையும் அவர் துவக்கி வைக்கவுள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. தொடர்ந்து இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக ஜெயின் கல்லூரியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்றைய தினம் இரவு மோடி கிண்டியில் உள்ள ஆளுநர்மாளிகையில் தங்குவார் என்று கூறப்படுகிறது.
பந்திப்பூர், முதுமலை, வயநாடு சரணாலயங்களை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்
இதனிடையே டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் 'ரைசிங் இந்தியா 2023' என்னும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசுகையில் பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 9ம்தேதி நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு வருகை தரவுள்ளார் என்று கூறியுள்ளார். அப்போது அவர், 50 ஆண்டுகள் புலிகள் பாதுகாப்பு நிகழ்வினை கொண்டாடும் வகையில் பந்திப்பூர், முதுமலை, வயநாடு சரணாலயங்களை பிரதமர் மோடி பார்வையிடுகிறார் என்று தெரிவித்தார். தொடர்ந்து, அதில் ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலபெண்ட் விஸ்பரர்ஸ்'ன் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.