Loading...
தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு பணிக்குழு: பிரதமர் மோடி அறிவிப்பு
தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு பணிக்குழு

தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு பணிக்குழு: பிரதமர் மோடி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2026
07:36 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தற்போதைய தேர்வு முறைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்வதற்காக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இதனைத் தெரிவித்துள்ள பிரதமர், நிலேகனி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை முழுமையாக உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை

மாணவர் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் மீது கடும் நடவடிக்கை

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகப் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய குற்றவாளிகள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கக் கடுமையான சட்டப் பிரிவுகளுடன் கூடிய புதிய சட்டத்தைக் நாடாளுமன்றத்தில் கொண்டுவர உள்ளதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் ராஜினாமா

கல்வித்துறை அமைச்சர் ராஜினாமாவைத் தொடர்ந்து வெளியான அறிவிப்பு

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி என்ற அரசியல் அமைப்பின் தலைமையில் நடத்தப்பட்ட தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் ராஜினாமா செய்த அடுத்த நாளே பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் தேர்வு முறையை முழுமையாக மறுசீரமைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதவாறு தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

தொழில்நுட்பம்

தேர்வு முறைகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கத் திட்டம்

நாட்டின் தேர்வு முறை மிகவும் நம்பகமானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், நவீன தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் மாற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உலகளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணரான நந்தன் நிலேகணி தலைமையிலான இந்த உயர்மட்டப் பணிக்குழு, தேர்வு முறைகளில் கொண்டுவர வேண்டிய அனைத்து சீர்திருத்தங்கள் குறித்தும் விரிவாக ஆராயும்.

நிலேகனி குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தவுடன், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் வரவிருக்கும் தேசிய அளவிலான தேர்வுகள் அனைத்தும் பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படும்.

ADVERTISEMENT