இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து!
இமாச்சலப் பிரதேசத்தின் 15வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு (58), நேற்று பதவி ஏற்றார். துணை முதல்வராக அக்னி ஹோத்ரி (60) பதவி ஏற்றுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் கடந்த 5ஆம் தேதி வெளிவந்தது. இமாச்சலின் 68 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. மேலும், முதல்வர் பதவியில் யாரை நியமிப்பது என்பது குறித்து அக்கட்சிக்குள் ஒரே சலசலப்பு நிலவி வந்தது. இதையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பிரச்சாரக் குழுத் தலைவரான சுக்விந்தர் சிங் சுக்குப் போதிய ஆதரவுடன் மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இமாச்சல் மாநில காங்கிரஸ் தலைவரான பிரதிபா சிங்கிற்கு புதிய எம்எல்ஏக்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
ட்விட்டரில் குவியும் பாராட்டு!
சுக்விந்தர் சிங்கின் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இமாச்சல் முதல்வராகப் பதவியேற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்விந்தர் சிங் சுக்குவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இவருக்குப் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தன் வாழ்த்தை ட்விட்டரில் வெளியிட்ட அவர், இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.