சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம்
மேற்கு வங்க பெண்கள் கோபமடைந்துள்ளனர், சந்தேஷ்காலியில் தொடங்கிய புயல் அந்த கிராமத்தில் மட்டும் இருக்காமல் மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் மிகவும் பெரிதாக பேசப்பட்டு வரும் சந்தேஷ்காலி பிரச்சனை குறித்து பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்க அரசாங்கம் ஒரு "குற்றவாளியை" காப்பாற்ற தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது என்று தெரிவித்தார். அவர் இங்கு குற்றவாளி என்று குறிப்பிடுவது முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை தான். மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காலியில் மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஷேக் ஷாஜகான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களைச் சந்தித்த பிரதமர் மோடி
ஆனால், ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இன்று மேற்கு வங்கம் சென்றிருந்த பிரதமர் மோடி, சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களைச் சந்தித்து பேசினார். 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு(UTs) 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஐந்து நாட்களுக்குள் அவர் மேற்கு வங்கத்திற்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும். கொல்கத்தாவில் இருக்கும் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அதன் பின், சந்தேஷ்காலி கிராமத்திற்கு சென்ற அவர், மேற்கு வங்க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.