சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை மாலை 4.15 மணிக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை மீண்டும் உத்தரவிட்டது. நேற்றும் இதே உத்தரவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. ஷாஜகானின் காவலையும், ஆதாரங்களையும் நேற்று மாலை 4.30 மணிக்குள் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், முன்னாள் திரிணாமுல் கட்சி தலைவர் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துவிட்டது. நேற்று இரவு 7.30 மணி வரை சிபிஐ குழுவிடம் குற்றவாளி ஒப்படைக்கப்படாததால் கொல்கத்தாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் இருந்து அதற்குபின் சிபிஐ குழு வெளியேறியது.
அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
ரேஷன் விநியோக முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜோதி பிரியா மல்லிக்கின கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். அவருடைய நெருங்கிய உதவியாளர் தான் இந்த ஷேக் ஷாஜகான் ஆவார். இந்நிலையில், ஷாஜகானின் வீட்டில் சோதனை நடத்த அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் ஜனவரி 5ஆம் தேதி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்துக்கு சென்றனர். அப்போது அங்கு சென்ற அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது 3 அதிகாரிகள் காயமடைந்தனர். அதற்குபின், பிப்ரவரி 7ஆம் தேதி சந்தேஷ்காலி கிராமத்தில் மக்கள் சேர்ந்து ஒரு பெரும் வன்முறை போராட்டத்தை நடத்தினர்.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள்
ஷேக் ஷாஜஹான், அவரது சகோதரர் சிராஜுதீன், அவரது கூட்டாளிகள் ஷிபாபிரசாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் உள்ளிட்ட உள்ளூர் திரிணாமுல் தலைவர்கள் உள்ளூரில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். ஷாஜஹானும் அவரது கூட்டாளிகளும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. முன்னாள் டிஎம்சி ஜிலா பரிஷத் தலைவரான ஷாஜகான், பிப்ரவரி 29 அன்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த விவகாரம் சிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது, இதற்கான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.