வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர்
வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏப்ரல் 1-ம் தேதி கோட்டயத்தில் தொடங்கி வைக்கின்றனர். விழாவுக்கு வருமாறு ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார். இதற்கான அழைப்பிதழை கேரளாவின் மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன் புதன்கிழமை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரிடம் வழங்கி, அழைப்புவிடுத்தார். 603 நாட்கள் நீடிக்க இருக்கும் இந்த விழாவின் கொண்டாட்டங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும். கேரள மாநிலத்தில் வைக்கம் சத்தியாகிரகம் என்பது மிக பெரும் நோக்கத்தை கொண்ட சத்தியாகிரகமாக இருந்தது.
வைக்கம் சத்தியாகிரகத்தின் தொடக்கம்
வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களை ஈழவர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற நடைமுறைக்கு எதிராக இந்தப் சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. நவம்பர் 1925 இல் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு நான்கு தெருக்களில் மூன்று தெருக்கள் திறக்கப்பட்ட பிறகு சத்தியாகிரகம் திரும்பபெறப்பட்டது. 1936 ஆம் ஆண்டில், நான்காவது சாலையை அணுகவும், கோவிலுக்குள் செல்லவும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வைக்கம் சத்தியாகிரகத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு, இறுதி வரை முன்னணியில் நின்று போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்பட்டார்.