இனி சென்னையில் போன்பே மூலமே மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும், எப்படி?
போன்பே செயலி மூலமாகவே ஹைதரபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் மேற்கொள்ளும் மெட்ரோ ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வகையிலான வசதியை வழங்கி வருகிறது போன்பே. மேற்கூறிய நகரங்களைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளையும் தங்கள் செயலியின் மூலம் வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது போன்பே நிறுவனம். இதன் மூலம், போன்பே ஸ்விட்ச் பிரிவில் சென்னை மெட்ரோவில் பயணம் செய்வதற்கா ஒரு வழி மற்றும் இரு வழி QR டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. டிக்கெட் வாங்கிய பிறகு நாம் பெறும் QR கோடை மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேற்ற வாயில்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
போன்பேயில் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள்:
முதற்கட்டமாக தற்போது போன்பே ஸ்விட்ச் பிரிவில் சென்னை மெட்ரோ ரயில் சேவையின் ஒரு வழி டிக்கெட்டுகளின் விற்பனை மட்டும் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களாக, இரு வழி டிக்கெட்டுகள் மற்றும் மெட்ரோ ரயில் பயணத்திற்கான ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் ஆகிய சேவைகளையும் போன்பே ஸ்விட்ச் மூலமாகவே வழங்கத் திட்டமிட்டிருக்கிறது போன்பே. மேலும், நேரடியாக மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை வாங்குவதை விட போன்பே மூலம் வாங்கும் QR டிக்கெட்டுகளுக்கு 20% சலுகையும் அளிகப்பட்டிருக்கிறது. 50 ரூபாய் மதிப்புடைய டிக்கெட்டை போன்பேயில் 40 ரூபாய்க்கே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.