ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வது, பரிசுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல்ஆணையம் மற்றும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் பிரச்சாரத்தின்போது தங்கள் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பாதுகாப்பு வழங்ககோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சிசிடிவி கேமரா, மத்திய படை பாதுகாப்பு போன்ற வசதிகளை அமைக்க உத்தரவிடவும் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அதுவரை இந்த ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற தடைவிதிக்கவேண்டும் என்று கோவை மறுமலர்ச்சி இயக்க தலைவர் ஈஸ்வரன் மனுதாக்கல் செய்திருந்தார்.
வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள்
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராகி ஏற்கனவே உயர்நீதிமன்றம் நியாயமாக தேர்தலை நடத்துவது குறித்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த புகார்கள்குறித்து முகாந்திரம் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணப்பட்டுவாடா குறித்த புகாரில் எந்த தேதி, யார் பணம், பணம் பெற்றோர் குறித்த விவரங்கள் என எதுவுமில்லை. மேலும் தேர்தல் நடைமுறைகள் துவங்கிவிட்டதால் அவற்றுள் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று கூறி தேர்தலுக்கு தடைவிதிக்க கோரிய மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.