ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தி முன்னோட்டம்
ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
அதுவரை இந்த ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவினை கோவை மறுமலர்ச்சி இயக்க தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்தும், பண விநியோகம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது.
இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதுமான நடவடிக்கைளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் பணம் கொடுத்து தான் வாக்குகள் பெறப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுவரை இடைத்தேர்தலுக்கு தடை
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்
மேலும் இதனை தொடர்ந்து அவர், தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
இது குறித்த மனுவினை முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பினேன்.
ஆனால் அவர் அந்த மனுவுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
எனவே உயர்நீதிமன்றம் இந்த குழு அமைத்தல் குறித்த உத்தரவை அளிக்கவேண்டும், அதுவரை இந்த இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
இதனிடையே இதே போன்று இந்த இடைதேர்தலுக்கான முறைகேடுகளை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.