
138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தாலும், 142 அடியினை உச்சகட்ட அளவாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதனால், 142 அடி வரை அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதில் கேரளா மாநிலத்திலுள்ள இடுக்கி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்னர் 3 கட்ட எச்சரிக்கை மற்றும் 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்டவை அறிவிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த நவ.24 மற்றும் டிச.10 உள்ளிட்ட தேதிகளில் நீர்மட்டம் 136 அடியினை எட்டியதால் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பின்னர் அதன் நீர்மட்டம் 134.95 அடியாக குறைந்தது.
அணை
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் இன்று(டிச.,18)அதிகாலை 3.30மணியளவில் 136 அடியாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு 3ம்-முறையாக மீண்டும் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 4மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 138அடியாக உயர்ந்துள்ளது.
அதனால் இடுக்கி மாவட்டத்திற்க்கு தற்போது 2ம்-கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 8,867 கனஅடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 139 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும்.
தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் பட்சத்தில் 140, 141, 142-அடிகளை எட்டுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை அதற்கேற்றாற்போல் மூன்று கட்டமாக விடுக்கப்படும்.
அதன்பின்னர் கேரளா பக்கம் உபரிநீர் திறந்துவிடப்படும் என்று கூறப்படுகிறது.