பவன் கல்யாண் உட்பட 24 அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் பதவியேற்க உள்ளனர்
ஆந்திராவில் என். சந்திரபாபு நாயுடு தலைமையில் 25 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு இன்று பதவியேற்கவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைமையிலான ஆந்திர அரசில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் மட்டுமே துணை முதல்வராக இருப்பார். இன்று அதிகாலை வெளியிடப்பட்ட 24 அமைச்சர்கள் பட்டியலில் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 3 பேரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள அமைச்சர்கள் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். விஜயவாடா, கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி ஐடி பூங்காவில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில், பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் அமைச்சர்களின் பட்டியலை, முதல்வர் சந்திரபாபு நாயுடு, கவர்னர் எஸ். அப்துல் நசீருக்கு அனுப்பி வைத்தார்.
இன்று காலை 11:27 மணிக்கு பதிவியேற்பு விழா தொடங்கும்
அமைச்சர்கள் குழுவில் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திரப் பிரதேசத் தலைவர் கே. அட்சன்நாயுடு மற்றும் ஜன சேனா கட்சியின் அரசியல் விவகாரக் குழுத் தலைவர் நாதெண்டலா மனோகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் NDAக்கு அமோக வெற்றியை பெற்று தந்த 74 வயதான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சில மாநிலங்களின் முதல்வர்கள் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.