ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 270+ பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் 48 மணிநேரத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளை மீட்கப்பட்டது. அப்போது, வங்காள மொழியில் எழுதப்பட்ட காதல் கவிதைகள் தண்டவாளம் முழுவதும் சிதறி கிடந்தன. இந்த காகிதங்கள் எல்லாம் கிழிந்த ஒரு நாட்குறிப்பின் பக்கங்கள் போல் இருந்தது. அந்த நாட்குறிப்பில் யானைகள், மீன்கள் மற்றும் சூரியன் போன்ற ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. இந்த நாட்குறிப்பின் சொந்தகாரர் பயணம் செய்யும் போது, தனது ஓய்வு நேரத்தில் இதை எழுதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த அருமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
பழுதுபட்ட தண்டவாளங்களில் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது
இந்த நாட்குறிப்பின் பக்கங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இன்று போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, பழுதுபட்ட தண்டவாளங்களில் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு கை அசைத்து விடை கொடுத்து, அவர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக பிரார்த்தனை செய்தார். சேவைகள் மீண்டும் தொடங்கபடுவதற்கு முன்பு இரண்டு வழிகளும் சோதனை செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த மாபெரும் ரயில் விபத்தால் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 1,175 பேரில் 793 பேர் சிகிச்சைக்குப் பிறகு வெளியேற்றப்பட்டுள்ளனர்.