நடமாடும் கழிவறைகள், தனி தொலைத்தொடர்பு கோபுரம்: விறுவிறுப்பாக நடைபெறும் த.வெ.க மாநாட்டு ஏற்பாடுகள்
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டியில், வி.சாலையில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் கட்சியில் கொள்கைகளை அறிவிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், 'உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்' என தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இன்று அறிக்கை மூலமாக கட்சியினரை வரவேற்றார்.
Twitter Post
மாநாட்டிற்கான ஏற்பாடுகள்
தவெக மாநாட்டிற்கு மாநிலம் முழுவதிலும் இருந்து பல லட்ச நிர்வாகிகள் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அமர்வதற்காக சுமாா் 75 ஆயிரம் நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர அவர்கள் பயன்பாட்டிற்காக சுமாா் 300 நடமாடும் கழிப்பறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு நடப்படும் மருத்துவ குழுக்களும், 150 டாக்டர்ஸ், ஹெல்ப் டெஸ்க்குகளும் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாநாடு நடைபெறும் 85 ஏக்கர் பரப்பளவு திடல் முழுவதும் 937 கம்பங்கள் நடப்பட்டுள்ளது. ஒவ்வென்றிலும் 16 விளக்குகள் வீதம் 14 ஆயிரத்து 992 விளக்குகள் பொறுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் வாகனங்களில் தொண்டர்களுக்கு நேரடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உட்பட 5500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மின்வாரியம் சார்பாக தவெக கட்சியினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், வாகனங்களின் மேல் அமர்ந்து கொண்டு கொடி பிடித்து வரக்கூடாது. உயரமின்னழுத்த கம்பிகள் மீது பட்டாள் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் இந்த எச்சரிக்கை. மேலும், மாநாட்டுத் திடலில் இருந்த மின் கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு தேவைப்படும் மின்சாரம் 60 உயர் ரக ஜெனரேட்டர் மூலம் பெறப்படும். மாநாட்டுப் பந்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 27ஆம் தேதி அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது. இதுபோக பொதுமக்கள் வசதிக்காக தற்போது மாநாட்டு திடல் அருகே தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.