
நாடாளுமன்ற முடக்கம் - மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்கும் எதிர்கட்சியினர்?
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம்தேதி துவங்கிய நிலையில், இந்த மணிப்பூர் விவகாரம் காரணமாக முற்றிலுமாக முடங்கியது.
நாடாளுமன்ற விதி 267படி மணிப்பூர் குறித்து நீண்டநேர விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில், விதி 176படி, குறுகியகால விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்தது.
அதேபோல் நாடாளுமன்ற 2 அவைகளிலும் பிரதமர் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதனால் நாடாளுமன்றத்தின் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் மக்களவை சபாநாயக்கரும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரும் திணறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே வேறு பல முக்கியமான மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கலவரம்
அவை தலைவருக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆலோசனை
இந்நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, மணிப்பூர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் எவ்வித தடையுமின்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் விவாதம் நடத்தும் வகையில் அவை தலைவருக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதனை மோடி அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்பப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் பதிலளிக்க வேண்டும் என்பதிலிருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கியுள்ளதா? என்பது குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.