பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அமெரிக்காவில் கொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு செக் குடியரசு நாட்டில் சிறையில் உள்ள நிகில் குப்தா, சட்ட உதவி மற்றும் தூதரக அணுகல் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சஞ்சீவ் கண்ணா இந்த வழக்கில் நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறி, இதில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து இந்திய அரசு முடிவு செய்யும் என கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மதிக்கவும்: உச்சநீதிமன்ற அமர்வு
நிகில் குப்தா சார்பில் அவருக்கு வேண்டியவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளிநாட்டு நீதிமன்றத்தின் இறையாண்மை, அதிகார வரம்பு மற்றும் அந்த நாட்டின் சட்டத்தை இந்த நீதிமன்றம் மதிக்க வேண்டும் என தெரிவித்து, இந்த விஷயத்திற்குள் தலையிட நீதிபதிகள் மறுத்து விட்டனர். "வியன்னா ஒப்பந்தத்தின் படி தூதராக அணுகலை பெற உங்களுக்கு அனுமதி உண்டு. அதை நீங்கள் பெற்றுவிட்டீர்கள்" என நீதிபதிகள் கூறியதாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. முன்னதாக டிசம்பர் 15ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குப்தா குடும்பத்தினரை செக் குடியரசு நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகில் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் என்ன இருந்தது?
நிகில் குப்தா செக் குடியரசு நாட்டிற்கு வணிக ரீதியான பயணம் மேற்கொண்டிருந்த போது, கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி ப்ராக் விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர் கைதில் முறையான வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை எனவும், கைதில் முறைகேடுகள் நடந்ததாகவும் அவரின் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், குப்தா தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உணவாக மாட்டுக்கறி மற்றும் பன்றி இறைச்சி வழங்கப்படுவதால், இது அவரின் மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குப்தாவிற்கு தூதராக அணுகல் வழங்கப்படவில்லை எனவும், சட்ட ரீதியான மேல் நடவடிக்கைகளை எடுக்க அவரின் குடும்பத்துடன் பேசுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்த மனு குற்றம் சாட்டியது.
நிகில் குப்தா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?
டெல்லியை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிக்கும் நிகில் குப்தா என்பவர், நியூயார்க்கில் அமெரிக்க-கனடா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய அடியாளை $1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பணியமர்த்த முயன்றதாக அந்நாடு குற்றம் சாட்டியது. மேலும், இந்திய அதிகாரி ஒருவருடன் குப்தா தொடர்பில் இருந்ததாகவும், அந்த அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரிலேயே பன்னுனை கொல்லும் முயற்சியில் குப்தா இறங்கியதாக, அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கூறியது. குப்தா பணியமர்த்த முயன்ற நபர், ரகசிய பெடரல் ஏஜென்ட்டான காரணத்தால் இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று செக் குடியரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பன்னுனை கைது செய்தது.