Page Loader
ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம் - அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

எழுதியவர் Nivetha P
Jan 04, 2024
05:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துள்ள நபர்கள் பணியில் நியமிக்கப்பட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினை கைவிடுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் சிவசங்கர், சமரசமாக இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என்று கூறி, பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார். அதன்படி சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று(ஜன.,3) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

போக்குவரத்து 

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை 

அதன்படி, தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் ஏஐடியூ, சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 30 தொழில்சங்க நிர்வாகிகள், தொழிலாளர் நலத்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த பேச்சுவாரத்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது. மேலும், தமிழக அரசு கொடுத்த பதில்கள் தொழிலாளர் சங்கத்தினருக்கு திருப்தியாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் வரும் ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்ய போவதாக தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு எடுத்து, அதற்கான அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகத்தின் அரசு பேருந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.