Page Loader
எமிரேட்ஸ் விமானம் மீது திடீரென விழுந்த லேசர் ஒளி வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
எமிரேட்ஸ் விமானம் மீது திடீரென விழுந்த லேசர் ஒளி வெளிச்சம்

எமிரேட்ஸ் விமானம் மீது திடீரென விழுந்த லேசர் ஒளி வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 26, 2025
11:33 am

செய்தி முன்னோட்டம்

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான தருணம் ஏற்பட்டது. துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது திடீரென பச்சை நிற லேசர் ஒளி தாக்கியதால் விமானம் தரையிறங்கும் தருணத்தில் பதற்றம் நிலவியது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் உயரத்தில் பறக்கவைத்து, கட்டுப்பாட்டறையுடன் தொடர்பு கொண்டு நிலையை சீர்செய்தார். பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. 326 பயணிகளும் பத்திரமாக விமான நிலையத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவரங்கள்

விமானம் மீது பாய்ச்சப்பட்ட லேசர் ஒளி எங்கிருந்து வந்தது?

விமானம் தரையிறங்கச் சற்று முன், பரங்கிமலை பகுதிக்குத் மேலாக பறந்தபோது, அப்பகுதியிலிருந்து ஒரு சக்தி வாய்ந்த பச்சை நிற லேசர் ஒளி விமானத்தின் மீது பாய்ந்தது. இந்த தாக்கம் சில நொடிகள் நீடித்ததாலும், விமானியின் பார்வை பாதிக்கப்பட்டதால், சிறிது நேரம் விமான ஓட்ட சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, விமான பாதுகாப்பு பிரிவு (BCAS), சென்னை விமான நிலையம் மற்றும் காவல் துறையினர் இணைந்து விசாரணையைத் தொடங்கி, அந்த ஒளி பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி பகுதிகளிலிருந்து வந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம்

ஏற்கனவே இதே போன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது என தகவல்

விமானங்கள் மீது லேசர் ஒளி பாயும் சம்பவங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் 3 கட்டிட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்திய விமான நிலைய ஆணையம் இதுபோன்ற செயல்கள் விமான போக்குவரத்துக்கு கடுமையான ஆபத்து ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. பொது மக்களும் இதில் விழிப்புடன் செயல்பட்டு, தகவல் தெரிந்தவுடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மேலதிக கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.