ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்
இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறப்போவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் ரூ.2,000 நோட்டுகளை வைத்துள்ளவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் அந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று(மே.,23) முதல் வங்கிகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுக்களை கொடுத்து மாற்றி கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் தங்கள் பணத்தினை வரவு வைத்து கொள்ளலாம். இந்நிலையில் இந்த ரூ.2,000 நோட்டுக்கள் திரும்ப பெறுவதற்கான அறிவிப்பு வெளியான பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் முதன்முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினை ஈடுச்செய்யவே ரூ.2,000நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை திரும்பப்பெறுவதால் பொருளாதார பாதிப்புகள் மிகக்குறைவு தான் என்று கூறியுள்ளார்.
பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வங்கிகளில் நோட்டுகளை மாற்ற ஏற்பாடு
தொடர்ந்து பேசிய அவர், ரூ.2,000 நோட்டுகளை மாற்றுகையில் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை குறைக்க வங்கிகள் போதுமான அளவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர், ரூ.50,000 அல்லது அதற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமானால், 'பான்' எண் வருமானவரி தேவைக்காக குறிப்பிடுவது வழக்கம். இந்த முறையானது ரூ.2,000நோட்டுகளை ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்வோருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செப்டம்பர் மாத இறுதிவரை ரூ.2,000 நோட்டுக்கள் எவ்வளவு வரும் என்பதை பொறுத்தே அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். சுற்றுலாப்பயணமாக வெளிநாடுச்சென்றவர்களுக்கும், பணி விசா கொண்டு வெளிநாடு சென்ற இந்தியர்களுக்கும் ரூ.2,000நோட்டுகளை மாற்றுவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரிசர்வ்வங்கி கவர்னர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.